செ.கொத்தமங்கலம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
விழுப்புரத்தில் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா;

திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தலித் மக்கள், நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் பொதுவாக உள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை, சிலர் மட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், அதில் மீன் குத்தகை எடுக்கும் போதும், எங்களை அழைப்பதில்லை. மரங்களை வெட்டி ஏலம் விடும் போதும், எங்களை அழைப்பதில்லை. ஒரு தரப்பினர் மட்டும் பயன்படுத்துகின்றனர். எங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன.இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, எங்கள் மீது அக்கறை செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்' பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்ல மனு அளிக்குமாறு கூறினர். இதனால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.