சேதுபாவாசத்திரம் அருகே சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு சடலத்துடன் மறியல் போக்குவரத்து பாதிப்பு 

சாலை மறியல்;

Update: 2025-03-18 16:39 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ( 42) இவரது மனைவி புனிதா ( 35) இவர்களுக்கு கனிஷ்கா (14) அனுஷ்கா(12), ஹர்ஷிகா(8) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.  ரமேஷ் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே இடையாத்திமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 15 ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ரமேஷ் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் திரும்பிக் கொண்டிருந்தபோது, செந்தலைப்பட்டினத்தில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த அசாருதீன் என்பவரது மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.  ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து விளங்குளம் கொண்டு வரும் வழியில், செவ்வாய்க்கிழமையன்று மாலை சேதுபாவாசத்திரம் கடைவீதியில் அவரது உறவினர்கள் ரமேஷ் உடல் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ரமேசின் மனைவி, மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ரமேஷின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  சாலை மறியல் காரணமாக மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன், பேராவூரணி உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், மற்றும் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.  விபத்திற்கு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Similar News