மாரடைப்பால் இறந்த தாயால் தேர்வுக்கு தயாரான மகள் அதிர்ச்சி: கண்கலங்கியபடி தாயின் உடல் முன்பு ஆசீர்வாதம் வாங்கி தேர்வுக்கு சென்றார்
துயரச் சம்பவம்;
பட்டுக்கோட்டை அருகே, செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை, மாரடைப்பால் இறந்த தாயின் உடல் முன்பு, ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தேர்வுக்கு சென்ற சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியை சேர்ந்த, ராஜேந்திரன் - கலா தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17),. ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பயோ-மேக்ஸ் பிரிவு படித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிளஸ் 2, உயிரியல் பாடப்பிரிவு பொதுத்தேர்வுக்கு காவியா தயாராகி வந்தார். ஆனால், காவியாவின் தாய் கலா, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், காவியா நிலைகுலைந்து போனார். இருப்பினும், தேர்வை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில், காவியா தனது தாயின் உடல் முன், கதறி அழுதபடியே, தரையில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தேர்வு எழுதச் சென்றார். இதைப் பார்த்த உறவினர்கள் கண் கலங்கி நின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி காவியாவை பார்த்து, அவரது சக தோழிகள் கட்டியணைத்து அழுதனர். இது குறித்து மாணவி காவியா கூறியதாவது: எனது அப்பா ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். எனது தாய் தான் எங்கள் குடும்பத்தின் துாண். எனக்கு, காயத்ரி என்ற அக்காவும், திருச்செல்வம் என்ற அண்ணனும் உள்ளனர். எனது அண்ணன் கல்லூரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருகிறார். அக்காவுக்கு 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. படிப்பு தான் முக்கியம், படித்து ஆளாகி அப்பாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என எனது அம்மா கூறுவார். நான் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதச் செல்லும்போது, எனது அம்மா காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தேர்வு எழுத செல்வது வழக்கம். அவர் இறந்ததால், எனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது" என கண்ணீருடன் கூறினார்.