தஞ்சாவூரில், மனைவி, மகள்களை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார்

புகார்;

Update: 2025-03-18 16:43 GMT
தஞ்சையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், அதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் இரா.இராஜாராமன் ஆகியோரிடம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா,  குளக்குடி ஊராட்சி பூலாங்கொல்லை முனியாண்டி மகன் குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  "நான், மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு 24 வயதாகிறது. எனக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், சுபாஷினி  (3)  சுபா (1) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் ஊருக்கு சிவகங்கை மாவட்டம், காளையர்கோவில் வட்டம், தவசிக்குடி என்ற ஊரை சேர்ந்த செம்மாறி ஆட்டு தொழில் செய்து வரும், ரெகுநாதன் மகன் பாலாஜி என்பவர் என்னை புரோக்கர்களுடன் அணுகி 480 செம்மறியாடுகள், 180 செம்மறியாட்டு குட்டிகள், 3 பசுமாடு, 20 வெள்ளாடுகள் மேய்க்க இரண்டு லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாகவும் பேசினர். என்னை மட்டும் வரச்சொன்னார்கள். நான், எனது, மனைவி மற்றும் மகள்கள் இருப்பதால் அவர்களுடன் வருவதாக சொன்னேன். மேலும், அன்றாடம் சமைத்து சாப்பிட வீடு ஒன்றையுைம், சமையலுக்கு பணம் தரவும் கேட்டு கொண்டேன். பாலாஜி எனக்கு இரண்டு லட்சம் கொடுத்து விட்டு, என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்க வைத்தார். நான் 1 மாதம் ஆடுகள் மேய்த்தேன். ஆனால், எனக்கு சரியான வீடு தராமல், மின்வசதி செய்து தராமல், சாப்பாட்டு செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தால், குழந்தைகளுக்கு பால் முதலியவை வாங்க சிரமப்பட்டு காட்டில் கிடைக்கும், கீரைகள், காய்கறிகளை கொண்டு குடும்பம் நடத்தினேன். ஒரு கட்டத்தில் குழந்தைகள் மற்றும் மனைவிக்கு அன்றாட செலவுகளுக்கு பணமின்மையால் அவரிடம் மின் பல்பு, அன்றாட செலவுகளுக்கு கேட்டேன். நீங்கள் தராவிட்டால், வேறு இடத்தில் தங்கிக் கொள்வதாக தெரிவித்தேன். இதனால், என்னை கொட்டகையில் சங்கிலியில் 3 நாட்கள் கட்டி வைத்தனர்.  இதனால் நானும், எனது மனைவியும், குழந்தைகளுடன் தஞ்சாவூர் மாவட்டம்  குளக்குடி கிராமத்திற்கு  வந்த பிறகு, பாலாஜி மற்றும் அவரைச் சார்ந்த நபர்கள் என்னுடைய ஊருக்கு வந்து, என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நான் எவ்வுளவு சொல்லியும் கேட்காமல் காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று விட்டனர். ரூ.2 லட்சத்தை கொடுத்தால் மட்டுமே மனைவி, குழந்தைகளை விடுவேன் என்கிறார்கள். என் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு தர கொத்தடிமை மீட்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டு கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.  மனுவைப் பெற்றுக்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News