காட்டுப்பன்றியால் மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதம்... விவசாயிக்கு இழப்பீடு
விவசாயிக்கு இழப்பீடு ;
மரவள்ளிக்கிழங்கு பயிரை, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, வனத்துறை சார்பில், திங்கள்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது. தமிழகத்தில், வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தினால், விவசாயிகள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால், வனத்துறை அலுவலர்கள் ஆய்வின் பேரில், வனத்துறை சார்பில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் குரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த சேகர். இவர், கடந்தாண்டு நான்கு ஏக்கரில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்திருந்தார். இதில், சுமார் ஒரு ஏக்கர் மரவள்ளிகிழங்கை, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. இதனால், மனமுடைந்த சேகர், உடனடியாக தஞ்சாவூர் கோட்ட வனத்துறை அலுவலருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள், சேகரின் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, அவருக்கு உரிய நிவாரணம் வழங்க, தமிழக வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதையடுத்து, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், வனத்துறை சார்பில், பாதிக்கப்பட்ட விவசாயி சேகருக்கு, நிவாரணமாக, 7,500 ரூபாய்க்கான காசோலையை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் ரஞ்சித் உடனிருந்தனர்.