சேலத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை
கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்பு;
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துதல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள், கையேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான பரவலாக்கப்பட்ட, வலுவான, வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் அடுக்குமாடி கட்டிட பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதிகளில் புதிதாக வாக்குச்சாவடி அமைத்தல் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நடராஜன், உதவி கலெக்டர்கள் லோகநாயகி, பிரியதர்ஷினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.