ஓராண்டுக்குள் சேதமடைந்த கொசத்தலை ஆற்றுக் கரைகள் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு
கொசஸ்தலை ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகளுக்காக 9.10 கோடி ரூபாயில் போடப்பட்ட கரை ஓராண்டுக்குள் சேதமடைந்ததால் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது;
கொசஸ்தலை ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகளுக்காக 9.10 கோடி ரூபாயில் போடப்பட்ட கரை ஓராண்டுக்குள் சேதமடைந்ததால் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கி, வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பூண்டி நீர்தேக்கத்தை அடையும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், வன்னிப்பாக்கம், நாப்பாளையம் வழியாக, 136 கி.மீ., துாரம் பயணித்து எண்ணுாரில் வங்கக்கடலில் முடிகிறது. மழைக்காலங்களில், பூண்டி நீர்தேக்கம் நிரம்பும் போது, வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்கள் பாதிப்பு ஏற்படுவதும், அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர் கதையாகி வருவதாவும், கடந்த காலங்களில்,வன்னிப்பாக்கம், நாலுார், கம்மார்பாளையம், மடியூர், நாப்பாளையம், கொண்டக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் வெள்ளநீர் மூழ்கடித்து பெரும் பாதிப்புகளை உண்டாக்கியதாகவும், இதனால் பாதிப்புக்கு ஆளானதாகவும் தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள். மழையாலும், பூண்டியின் உபரி நீராலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், கரை உடைப்புகளை தவிர்க்க, பலவீனமாக ஆற்றின் கரைகள் கண்டறியப்பட்டு நீர்வளத்துறையினர் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். வன்னிப்பாக்கம், மடியூர் கிராமங்களுக்கு இடையே ஆற்றின் இருபுறமும் ₹9.10 கோடி மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை நீர்வளத்துறையினரால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. கரையோரங்களில் 2 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்து, கரைகளில் இருந்து கான்கிரீட் சுவர் வரை சரிவுப்பகுதிகளில் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு இறுதியில் கனமழை மற்றும் பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்,புதியதாக சீரமைக்கப்பட்ட கரைகள், ஆற்று வெள்ளத்தில் கரைந்து போனது, தடுப்பு சுவர்கள் முற்றிலும் உடைந்தும், சிதைந்துபோனது. சரிவுகளில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் கரையுடன் சரிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வன்னிப்பாக்கம் கிராமத்தில், 100 மீட்டர் தொலைவிற்கு கரை முற்றிலும் சிதைந்து உள்ளது. தரமற்ற முறையில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், ஓராண்டிற்குள் அவை சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரை சீரமைப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யவில்லை எனவும்,கட்டுமானம் செய்து, 6 மாத காலத்திற்குள் இவை சேதம் அடைந்து உள்ளதாகவும்,தரமற்ற முறையில் பணிகள் நடந்துள்ளதாகவும்,அரசின் நிதி முற்றிலும் வீணடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.