உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் சேந்தமங்கலம் வட்டத்தில் 2 –வது நாளாக அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, கள ஆய்வு.;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், காலை 9 மணி முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அதன்தொடர்ச்சியாக இன்று காலை 9 மணி வரை சேந்தமங்கலம் வட்டத்தில் 2-வது நாளாக அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் வட்டத்தில் இரவு சேந்தமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கான உணவு, குடிநீர் வசதி, படுக்கை வசதி மற்றும் கழிப்பறை அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை விபரம், மருத்துவ பணியார்கள் விபரம், சிகிக்சை அளிக்கப்பட்ட விபரம், நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார்.தொடர்ந்து, அதிகாலையில் முத்துக்காப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பால் பரிசோதிக்கப்படும் முறை, பால் கொள்முதல் விலை, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். அரசினர் கால்நடை மருத்தகத்தில் மருந்து பொருட்களின் இருப்பு, கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவ பணியாளரிடம் கலந்துரையாடினார். முத்துகாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், வருகை தரும் மாணவ, மாணவியர்களின் மொத்த எண்ணிக்கை, பணிபுரியும் மொத்த ஆசிரியர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பெற்றோருடன் கலந்துரையாடினார். மேலும், ரூ.70,000/- மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்தும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த மாணவர்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், உணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குட்டையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுடன் குட்டை தூர்வாரப்பட்ட விபரம் குறித்து கேட்டறிந்தார். வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து, பட்டியல்படி உணவு சமைத்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாணவர்களுக்கு உணவினை சுவையாகவும், தரமாகவும் சமைத்து வழங்க வேண்டுமென பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள குளத்தை பார்வையிட்டு குளத்தை சுற்றி கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார். சேந்தமங்கலம் பேரூராட்சி வாரச்சந்தையில் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மொத்த கடைகள், வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம், விற்பனை விபரம், பொருட்களின் காலாவதி காலம், பேருந்துகள் வந்து செல்லும் நேர பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அக்கியம்பட்டி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை பார்வையிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். பால் குளிரூட்டும் மையத்தினை பார்வையிட்டு குளிரூட்டும் திறன், தினசரி சேகரிக்கப்பட்டு குளிரூட்டப்படும் பாலின் அளவு, சுத்திகரிக்கும் முறை, பால் உபப்பொருட்கள் தயாரித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.