ஆதரவற்றோர் இல்ல புதிய கட்டிடம் திறப்பு ஆட்சியர் பங்கேற்பு
ஆதரவற்றோர் இல்ல புதிய கட்டிடம் திறப்பு ஆட்சியர் பங்கேற்பு;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெருமாம்பாளையத்தில் பராமரிக்கும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோரை பராமரித்து வருகிறார்கள். இந்த பராமரிக்கும் கரங்கள் இல்லம் சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்பு மையமாக இயங்கி வருகிறது. இங்கு ஆதரவற்று வரும் கைக்குழந்தைகள் உரிய ஆவணங்களை பெற்று கொண்டு குழந்தைகளை தத்தெடுக்க காத்திருப்பவர்களுக்கு குழந்தைகளை தத்து கொடுப்பது வழக்கம். இந்த குழந்தைகளை பராமரிப்பதற்காகபராமரிக்கும் கரங்கள் இல்ல வளாகத்தில் புதிதாக லிப்ட் வசதியுடன் கட்டப் பட்ட கட்டிடத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா திறந்து வைத்தார். முதியவர்கள் சென்று வர வசதியாக லிப்ட் வசதி மற்றும் முதியவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக உணவு அருந்தும் அறை ஆகியவற்றை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதரவில்லாத முதியவர்கள் ஆதரவில்லாத குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரை இந்த இல்ல நிர்வாகி செல்வராஜ் பராமரித்து வருகிறார். அரசு சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு சார்பாக கிடைக்கும் நலத்திட்டங்களை அவர்களுக்கு வழங்கி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆவண செய்வோம் என்று கூறினார். அதேபோன்று தத்தெடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக பராமரிக்கிறார்களா என அரசு கண்காணிக்கும் ஆனால் இந்தப் பணியை இந்த பராமரிக்கும் கரங்கள் இல்ல நிர்வாகிகளும் கண்காணிக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் இல்ல குழந்தைகள் யோகாசனம் செய்தும் பாடலுக்கு நடனமாடியும் தங்கள் திறமைகளை காட்டினார். ஏழை எளிய முதியவர்கள் நரிக்குறவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வழங்கினார். நரிக்குறவ பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முக்கிய பெண் பிரமுகர்களுக்கும் பாசி மாலையை அணிவித்து தங்கள் மரியாதையை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி திருச்செங்கோடு அரசு மருத்துவ தலைமை மருத்துவர் அதிகாரி மருத்துவர் மோகன பானு குழந்தைகள் நல குழு தலைவர் சதீஷ் பாபு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கற்பகம் நன்னடத்தை அலுவலர் ரேணுகா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் இறுதியாக நன்றி கூறினார்.