இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மத்திய பாஜகவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..
இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மத்திய பாஜகவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..;

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் (29.03.2025) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை செய்பவரை திரட்டி பாஜக அரசை கண்டித்து 1,170 இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக இராசிபுரம் ஒன்றிய செயலாளர் K.P. ஜெகநாதன் தலைமை வகித்தார். இராசிபுரம் நகர செயலாளர் N.R. சங்கர் முன்னிலையில் வகித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் K.R.N. இராஜேஷ்குமார் கண்டன உரையாற்றி பேசினார். அப்போது பேசிய அவர், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கடந்த 6 மாதமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு தரவில்லை. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருந்தாலும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் 100 நாள் திட்டம் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாய் தரவில்லை. இந்த திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணமாகும். செய்த வேலைக்கு உரிய தொகையை வழங்க வேண்டும். நியாயமாக வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்தபோது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துக் கூறி, வறட்சியின் காரணமாக வேலையில்லாமல் இருக்க கூடாது என்பதற்காக வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். இந்தத் திட்டத்தை 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும், சுமார் 1 கோடி பேர் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இவ்வளவு திட்டத்திற்கு கடந்த 6 மாத காலமாக 4 ஆயிரம் கோடியே 37 லட்சம் ரூபாய் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை முடக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. ஆனால் அது முடியாது. இந்த திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். இந்த திட்டத்தை நீக்க நினைத்தால் பல்வேறு மாநில கூட்டணி கட்சிகளின் நம்பி இருக்கும் பாஜக இந்த திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து முடக்க முடியாது. இதனால்தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் திட்ட நிதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். எனவே, இந்த நிதியை பயனாளிகளுக்கு கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி உள்ளது. தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய இந்த பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒரிசா, மேற்குவங்கம் பாஜக ஆட்சி இல்லாத பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிக்கை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்காகத்தான் தமிழ்நாடு முதல்வர் இந்திய மாநில முதல்வர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியுள்ளார். 1971-ம் ஆண்டு தொகுதி நிலவரங்கள் எவ்வாறு இருந்ததோ அதனையே பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்கள். வட மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை ஆட்சி அமைத்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் தொகுதி மறு சீரமைப்பு கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை மகளிர் விடியல் பயணம், காமராஜர், எம்ஜிஆர் , கருணாநிதி பிறகு காலை உணவு திட்டத்தைக் கொண்டுவந்து இந்தியாவிலேயே முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறார். 5 பவுன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்தோம். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் தள்ளுபடி செய்யவில்லை. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனி குடும்ப அட்டை இருந்தால் மாதம் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் சட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கலைஞர் கனவு இல்லத்தில் திட்டத்தில் 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் மோடி அரசு வீடு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இராசிபுரம் ஒன்றியத்தில் மட்டும் 500 பேருக்கு மேல் கலைஞரின் கனவுகள் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 6,000 பேர் பயனடைந்து வருகின்றனர். இதுபோல தேர்தல் நேரத்தில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். மேலும், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், குடிநீர் திட்டங்களை கொண்டு வரவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இராசிபுரம் தொகுதியில், 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி ஆற்றில் இருந்து எடப்பாடி - பூலாம்பட்டியில் இருந்து குடிநீர் விரைவில் கிடைக்கும். ஊராட்சிகள் வாரியாக, வரக்கூடிய தீபாவளிக்கு காவிரி குடிநீர் கட்டாயம் கிடைத்துவிடும். தற்போது இதற்கான குடிநீர் குழாய்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ராசிபுரம், நாமக்கல், வெண்ணந்தூர், R. பட்டணம், R. புதுப்பட்டி, சீரப்பள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டு ஆட்சி அதிமுக எந்த திட்டங்களையும் செய்யவில்லை. எடப்பாடியும், ஓ பன்னீர்செல்வமும் ஆட்சியில் இருந்தபோது , தமிழகத்தில் எந்த வேலைக்கும் வட மாநிலத்தில் இருப்பவர்கள் பணியில் சேரலாம் என கையெழுத்து போட்டார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வேலை தமிழருக்கே என்று சட்டம் போட்டார். இந்த திட்டம் தமிழக அரசு வேலை தமிழர்களுக்கு என்பதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் 12 பேர் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், வடநாடு கொலை சம்பவம், நடந்துள்ளது. ஆனால் இன்று பாஜகவுடன் சரண் அடைந்துள்ள அதிமுகவிற்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் K.R.N. இராஜேஷ்குமார் கண்டன உரையாற்றி பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பட்டணம், சீரப்பள்ளி, பிள்ள்ளாநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பேரூர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமான கலந்துகொண்டனர்.