மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற அடையாள அட்டை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்;

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(01.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிமைகளில் பழனி அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற முகாமில் 87 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 42 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கும், 20 புதுப்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் 25 மாற்றுத்திறனாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிய பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். முன்னதாக, இன்று நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாமில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை UDID Card வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.