நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர்.;

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் நகரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய, 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும், மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும், தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிடிஓ அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாநகராட்சி மேயர் கலாநிதி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என, கோரி கோஷம் எழுப்பினர். மாநில நிர்வாகி வக்கீல் நக்கீரன், மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் வக்கீல் கைலாசம், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபாகரன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.