சேலம் மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்தபடுகிறதா என
போலீசார் திடீர் சோதனை;

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைதிகள் பயன்படுத்துகிறார்களா? என வார்டர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கைதிகள் யாராவது தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 41 போலீசார் சிறைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கைதிகளின் அறைகளுக்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். குறிப்பாக கைதிகள் செல்போன்கள், கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை மேற்கொண்டனர். காலை 6.50 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8.20 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.