கூவத்தூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா
கூவத்தூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூவத்தூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையேற்று நிகழ்ச்சியின் தொடக்கமாக கலையரங்கம் திறக்கப்பட்டு குத்து விளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நட்டார்.கூவத்தூர் கிழக்கு நடுநிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர்கள் சுந்தரேசன், சுந்தரவடிவேல், பட்டதாரி ஆசிரியர்கள் ஞானசேகர், குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் திருமலர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் வியாகுலமேரி ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை உரையாற்றும் போது எதற்கும் அஞ்சாமல் எவரிடமும் கெஞ்சாமல் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் கல்வி பயில வேண்டும் எனவும், மாணவ மாணவிகள் கல்வியில் தொடர் முயற்சியும் தொடர் பயிற்சியும் இருந்தால் தான் நாம் நினைத்ததை சாதித்து வெற்றியடைய முடியும் எனவும் கூறினார்.தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 85 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் கூறினார். மாணவ, மாணவிகள் கல்வி மட்டுமின்றி பன்முகத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஓய்வுபெற்ற ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு திரைப்படத்தில் மூன்று நிமிடம் மட்டுமே நடித்துள்ளார்.மூன்று நிமிட நடிப்பிற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது போன்ற தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என கேட்டுகொண்டார். பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களில் மாற்றுத்திறன் குழந்தைகளிடமும் நட்பாக பழகி வேறுபாடின்றி செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளையும் ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் சமமாக செயல்பட வேண்டும் என கூறினார். மாணவர்களின் நலன் கருதி கல்வியில் எதிர்காலத்திற்கு ஏற்ப பல புதிய பாடத்திட்டங்களையும் சலுகைகளையும் அரசு அறிவித்து கொண்டேயிருக்கிறது அவற்றை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய ஆரம்ப வகுப்பிலேயே அரசுப்பள்ளியில் சேருங்கள் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கண்டு ரசித்தனர்.பின்னர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்களால் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றுகளும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் இராஜாமணி நன்றி கூறினார்.