மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்க நிகழ்ச்சி
கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பயன்பட்டனர்;

நாகை மாவட்டம் சிராங்குடி புலியூர் ஊராட்சியில், கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு, மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், விவசாயி திரிபுரசுந்தரி மாணவிகளுக்கு மண்புழு தயாரிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், கீழ்வேளூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் 4-ம் ஆண்டு மாணவிகளான திவ்யா, கீர்த்திகா, பிரீத்தி, ருத்ரலேகா, சிந்தியா, சினேகா மற்றும் சோனா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சமையலறை கழிவுகள் மற்றும் தன் வீட்டுத் தோட்டத்தின் இலைகள் ஆகியவற்றை பயன்படுத்தி, விவசாயி திரிபுரசுந்தரி மண்புழு உரம் தயாரித்து, தன் வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்துகிறார். மேலும், மூலிகை செடிகள் வளர்த்து அதனுடன் 32 வகையான மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கை முறையிலான சாம்பிராணி செய்து, அதனை பிறரும் பயன்பெறும் வகையில் விற்று வருகிறார். வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயி திரிபுரசுந்தரியின் சாம்பிராணி தயாரிப்பு முறையை அறிந்து பயன் பெற்றனர்.