ஐவேலி பகுதியில் விவசாயம் செய்ய வடக்கு புத்தாறு ஆற்றில் குறுக்கே

பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை;

Update: 2025-04-03 10:37 GMT
  • whatsapp icon
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் உள்ள, ஐவேலி எனும் பெயருடைய 80 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இங்கு, விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிரும், உளுந்து, பயறும் சாகுபடியும் செய்து வருகின்றனர். அந்த நிலப்பரப்பிற்கு செல்வதற்கு, வாளாமங்கலத்தில் வடக்கு புத்தாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த 80 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்கள், உரங்கள் மற்றும் நெல் அறுவடை செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றை 6 கிலோ மீட்டர் தூரம், திருமருகல் கிராமத்தை சுற்றிக்கொண்டு விவசாயிகள் கொண்டு வர வேண்டி உள்ளது. மழைகாலங்களில், ஆற்று கரைகள் இடிந்து விழுந்து விடுகின்றன. இதனால், அவற்றை சுற்றியும் வரமுடியாத நிலை உள்ளது. கடந்த 3 தலைமுறையாக கோடைகாலங்களில் மட்டும் வண்டி பாதையாக சென்று வந்த பாதையும், பொதுப்பணித் துறையால் கரை அடைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், விவசாயம் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடக்கு புத்தாறு ஆற்றில் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியருக்கு, பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஐவேலி பகுதிக்கு செல்ல ஏதுவாக வடக்கு புத்தாறு ஆற்றில் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News