கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்
வியாபாரிகளுக்கு, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவு;

சேலம் மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களில் தமிழில் பெயர் பலகை இடம்பெறச் செய்வது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளின்படி தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. அதன் பின்னர், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.