வவ்வாலடி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி -வினா போட்டி

முதல், இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு கேடயம், பதக்கம்;

Update: 2025-04-04 07:26 GMT
வவ்வாலடி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி -வினா போட்டி
  • whatsapp icon
நாகை மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திருமருகல் சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து, ஒன்றிய அளவில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய சுற்றுச்சூழல் மற்றும் நெகிழி விழிப்புணர்வு வினாடி வினா போட்டியின் இறுதி சுற்று, வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலர் ரவி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்றிய அளவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், வெற்றி பெற்ற 12 பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டி, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. ஆசிரியர்கள் வெங்கடேஷ், வடிவேல், சிவக்குமார், செல்வி, ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதலிடமும், காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டாமிடமும், வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம், புத்தகம் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக, நெகிழி விழிப்புணர்வை முன்னிட்டு, காகிதப்பையும், முன்னாள் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மூலம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார்.

Similar News