விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்;

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார். இதில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4,352 ஆண்கள், 6,426 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 778 பேருக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஓமலூர் தொகுதியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மகளிருக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 10 ஆயிரத்து 778 பேர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர். மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு எப்போதும் ஆதரவு தரும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார். இதில் ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.