சங்கரன்கோவிலில் தனித்துவ அடையாள எண்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
தனித்துவ அடையாள எண்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்குத் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வம் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அரசின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்க இருக்கிறது. இதன் மூலம் அனைத்து துறை பயன்களையும் மானியங்களையும் ஒற்றைச்சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன்பெற முடியும். வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகள் பதிவு விவரம் நில உடமை வாரியாக மின்னணு பயிா் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விவசாயிகள் அரசுத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் நிலம் மற்றும் சுயவிவரம் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை பதிவு செய்திடாத விவசாயிகள் உடனடியாக தங்களுடைய பட்டா ஆதாா் எண் மற்றும் ஆதாா் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை கொண்டு சென்று தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மற்றும் வேளாண்துறை அலுவலகங்களில் பதிவு செய்யலாம் என்றாா்.