சேலம் அம்மாபேட்டையில் பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்
நிபந்தனை ஜாமீனில் விடுதலை;
சேலம் அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனிதநேயம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறக்கட்டளை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுெதாடர்பாக அறக்கட்டளை நடத்தி வந்த விஜயா பானு மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், வாணியம்பாடியைச் சேர்ந்த ஜெயப்பிரதா, வாகன ஓட்டுனர் சையத் முகமத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கோவை பொருளாதார கோர்ட்டு உத்தரவின்பேரில் விஜய பானு, ஜெயப்பிரதா, ஓட்டுனர் சையத் முகமத் ஆகிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்கள் தினமும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று 3 பேரும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இதற்கிடையில், இந்த வழக்கில் கைதான பாஸ்கரும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். அவருக்கும் நேற்று மாலை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய ஆசாமிகளான பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.