
திருக்கோவிலுார், தாசார்புரம், அண்ணா நகரை சேர்ந்தவர் பவுல் சாமுவேல் மனைவி திவ்யா, 36; வேலுாரில் உறவினர் வீட்டிற்கு சென்றவர், கடந்த மாதம் 24ம் தேதி மாலை 4:00 மணியளவில் சிதம்பரம் சென்ற அரசு பஸ்சில் ஏறி, திருக்கோவிலுார் வந்தார். நான்கு முனை சந்திப்பில் பஸ்சில் இருந்து இறங்கியபோது, தனது கட்டப்பையில் வைத்திருந்த 'பர்ஸ்' காணாமல் போனது தெரிந்தது. அந்த பர்ஸில், 2 சவரன் செயின், ரூ.6 ஆயிரம் வைத்திருந்தார். அவருடன் பயணித்து பின் தொடர்ந்து இறங்கிய பெண் மீது சந்தேகம் உள்ளதாக, திருக்கோவிலுார் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிந்து, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார், தலைமை காவலர் கலையரசி உள்ளிட்ட போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பர்சை திருடியது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, பிரபாகரன் மனைவி கவிதா, 33; என தெரியவந்தது. பழைய குற்றவாளியான அவர், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காமல் மதுரையில் தங்கி இருந்தார். அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். நகைகளை விற்று வைத்திருந்த, ரூ.1.60 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.