
கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினரின் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தன்ராஜ், கவுரவ தலைவர் மாயவன் முன்னிலை வகித்தனர். இதில், விரல் ரேகை பதிவு மற்றும் ஆதார் சரிபார்ப்பு பணிகளை 40 சதவீதம் மீண்டும் நடைமுறைபடுத்துதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தராசினை, அந்த அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டம் முழுவதும், 259 விற்பனையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல ரேஷன்கடைகள் மூடப்பட்டன.