
வாணாபுரத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட பல்வேறு இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து, அதில் வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா கடந்த 2023ம் ஆண்டு ஜுலை யில் உருவாக்கப்பட்டது. இதில் வடபொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலுார், மணலுார்பேட்டை ஆகிய, 4 குறு வட்டங்களும், 85 வருவாய் கிராமங்களையும் உள்ளன. வாணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி கட்டடத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையொட்டி புதிய தாலுகா அலுவலகம் கட்ட இடத்தை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பு, கால்நடை மருத்துவமனை வளாகம், தனியார் மருத்துவமனை அருகே உள்ள இடம், தற்போது இயங்கி வரும் தாலுகா அலுவலகத்திற்கு முன்புறம் உள்ள அரசு இடம், போலீஸ் நிலையம் அருகே உள்ள இடம் உட்பட பல்வேறு இடங்களை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, டி.ஆர்.ஓ., ஜீவா, தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மரிவாளன், வி.ஏ.ஓ., ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.