சேலம் சீலநாயக்கன்பட்டியில் கார் டிரைவரிடம் செல்போன் திருடிய சிறுவன் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் சீலநாயக்கன்பட்டி எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45), கார் டிரைவர். இவர் நேற்று மதியம் ராசிபுரம் செல்வதற்காக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவன் குமரேசன் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த நபர்களிடம் செல்போன், நகை திருட முயன்றான். தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவனை ஒப்படைத்தனர். இது குறித்து குமரேசன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி மற்றும் போலீசார் செல்போன் திருடியதாக பிடிபட்ட சிறுவனிடம் விசாரித்தனர். இதில் அவன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், செல்போன் திருடியதும் தெரியவந்ததை அடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.