அகரம் சீகூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.;

Update: 2025-04-09 09:03 GMT
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட, அகரம் சீகூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (09.04.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், ஒரு வட்டத்திற்குட்பட்ட கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் அரசு திட்டங்களில் பயன் பெறுவதற்கான அனைத்து வரைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருவாய் துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சான்றுகளும் இணையதள மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலமாக தாங்கள் விண்ணப்பித்த மனுவின் நிலை தெரிந்து கொள்ளலாம் சான்றுகளை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாறுதல் தொடர்பாக 'தமிழ் நிலம்' அலைபேசி செயலி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலி மூலமாக எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க, பதிவேடு, புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் இணையவழி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், ஊராட்சிகள், நகராட்சியின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு, அளவு மாற்றங்கள் போன்ற விவரங்களை அறியலாம் மேலும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கிராமப்புறங்களில் அரசு மற்றும் தனியார் இ சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதன் வாயிலாக பொதுமக்கள் எளிதில் தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் சான்றுகளை விண்ணப்பிக்கலாம். வேளாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்வதற்கும், விண்ணப்பிப்பதற்கும் உழவன் செயலியில் தெரிந்து கொள்ளலாம். இச்செயலியின் மூலமாகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் வேலை நாடுவோர்களுக்காக ஒவ்வொரு மாதமும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது முகாமில் கலந்து கொண்டு தங்கள் கல்வித் திறமைக்கேற்ற வேலைகளை தேர்ந்தெடுத்து பணியில் சேரலாம். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர்கள், தொழில் முனைவேராக விருப்பம் உள்ளவர்களுக்காக மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகள் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு வங்கி கடன் உதவி, மானியம், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வகையான திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள், தொழிற்கடனுதவிகள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி வரையிலான தொழில் துங்குவதற்காக மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று தமிழக அரசின் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதுபோன்ற அரசின் திட்டங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பின்னர், வருவாய் துறையின் சார்பில் இணையவழி பட்டா, வீட்டுமனை பட்டா 76 பயனாளிகளுக்கு ரூ.21,00,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 15 பயனாளிகளுக்கு ரூ.1,39,750 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சலவைப்பெட்டி 03 பயனாளிகளுக்கு ரூ.19,656 மதிப்பீட்டிலும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப மின்னணு அட்டை 15 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ.2,46,00,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை 03 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் ஆடுவளர்ப்புத் திட்டத்தில் 03 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டிலும், ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 05 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,00,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் விசை களையடுக்கும் கருவி 04 பயனாளிகளுக்கு ரூ.7,82,520 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் விதைப் பண்ணை திட்டத்தின் கீழ் 5கிலோ கேழ்வரகு விதைப்பைகள் 06 பயனாளிகளுக்கு ரூ.1,680 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் மண்புழு உரம் 02 பயனாளிகளுக்கு ரூ.2,50,000 மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தாது உப்பு கலவை 03 பயனாளிகளுக்கு ரூ.450 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர் கடனுதவி 10 பயனாளிகளுக்கு ரூ.6,22,000 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் 04 பயனாளிகளுக்கு ரூ.2,07,959 மதிப்பீட்டிலும் என மொத்தம் 215 பயனாளிகளுக்கு ரூ.2,87,44,265 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவுல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல்,இ.ஆ.ப., வேளாண்மை இணை இயக்குநர் பாபு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளர் க.கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News