சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள மொத்த கடைகள் விவரம், உரிய அனுமதி பெறாமல் கடைகள் ஏதேனும் உள்ளதா? ஏலம் போகாத கடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கேட்டறிந்து, கடைகளில் உள்ள மின் இணைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும் வாகன நிறுத்தத்தில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டண மற்றும் கட்டணமில்லா கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து 9-வது வார்டு பகுதியில் ரூ.3 கோடியே 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவின் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் ரூ.8 கோடியே 56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பக்கவாட்டு சுவருடன் கூடிய பசுமை பூங்கா ஆகியவற்றின் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் செந்தில்குமார், உதவி ஆணையாளர்கள் லட்சுமி, வேடியப்பன், செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், திலகா, கவுன்சிலர் தெய்வலிங்கம், உதவி பொறியாளர் பாஸ்கர், உதவி வருவாய் அலுவலர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.