ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார் -----
ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் -----;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், வீரசோழன் அல் அமீன் திருமண மஹாலில் தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பு, ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயிற்சியகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 22 இளைஞர்களுக்கு வெளிநாடுகளிலும், 20 இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் என மொத்தம் 42 இளைஞர்களுக்கு பணி ஒப்புதல் கடிதங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நமது பகுதிக்கு குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் திறன் மிகுந்த இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த முகாம் இன்று நடைபெறுகிறது. இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மை ஆகும். அதே நேரத்தில் உலகத்தினுடைய மிக முக்கியமான வேலை வாய்ப்புகளை ஆய்வு செய்யும் அமைப்பான இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனேஷன் என்ற அமைப்பு பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறது. இன்றைக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வேலைக்கு தகுதியான நபர்கள் இல்லை என்பது தான். எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவை திறன்களாக மாற்றி கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தான், தமிழ்நாடு அரசு நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார்கள். அதன் மூலம் மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலைசார்ந்த பயிற்சிகளை அளித்து வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உலகளாவிய அளவில் உருவாக்கி தரும் பொழுது அது பொருளாதாரத்தில் ஒரு சமநிலையையும், பண சுழற்சியும் ஏற்படுத்துகிறது. தாங்கள் பெற்ற அறிவு, கற்ற அறிவு ஆகியவற்றை வைத்து தங்கள் திறன்களை வளர்த்து கொள்வது மிக மிக முக்கியம் ஆகும். தற்பொழுது உள்ள காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நமது திறன்களை வளர்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாக உள்ளது. நீங்கள் அனைவரும் அறிவை திறன்களாக மாற்ற வேண்டும். உலகளவில் உள்ள வாய்ப்புகள், இந்திய அளவில் உள்ள வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தங்களுடைய திறன்களை வளர்த்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.