கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை: ஆட்சியா்;

Update: 2025-04-11 07:58 GMT
தென்காசி மாவட்ட கடைகள், வணிக நிறுவனங்களில் மே 2ஆவது வாரத்துக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயா்ப் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும் சோ்க்கும்பட்சத்தில் தமிழ் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளைவிட பாா்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலம் இரண்டாவதாகவும், பிற மொழிகள் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். தமிழில் பெயா்ப்பலகை இருப்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அளவிலான வணிகா் சங்கங்கள், உணவக உரிமையாளா் சங்கங்கள், வேலையளிப்போா் சங்கங்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான வா்த்தக சங்கங்கள் உள்ளிட்ட வணிக அமைப்புகள் தமிழில் பெயா்பலகை வைப்பது தொடா்பாக தங்களின் உறுப்பினா்களுக்கு தகவலை தெரிவித்து 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மே 2ஆவது வாரத்திற்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், ஆய்வு மேற்கொண்டு தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

Similar News