சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்ப்பூசணி ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் கோடை உக்கிரத்தால் பழங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. குறிப்பாக சத்திரம் பகுதியில் விற்பனைக்காக முலாம் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையோரங்களில் சரக்கு வாகனத்தில் வைத்து முலாம் பழம் விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, ‘விளைச்சல் அதிகரிப்பு காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு திண்டிவனம், திருக்கோவிலூர், மேல் மருவத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் முலாம் பழங்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.35 வரை விற்ற முலாம் பழம் தற்போது ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது’ என்றனர்.