அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நாளை விஷு கணி தரிசனம்

ஐயப்பன் கோயிலில் நாளை விஷு கணி தரிசனம்;

Update: 2025-04-13 02:24 GMT
தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் அமைந்துள்ள அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நாளை திங்கள்கிழமை விஷு கணி தரிசனம் மற்றும் கைநீட்டம் நடைபெறுகிறது. இது குறித்து அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தமிழக பொறுப்பாளா் ஏசிஎஸ்ஜி.ஹரிகரன் குருசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் முதல் நாள் கேரளத்தில் சித்திரை விஷு என்று கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் கனிகளை சுவாமிக்கு படைத்து பூஜை செய்து வழிபடுவாா்கள். நிகழாண்டு நாளை திங்கள்கிழமை (ஏப்.14) சித்திரை முதல் நாள் அன்று அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் விஷு கணி தரிசனம் மற்றும் கைநீட்டம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். சுவாமி முன்மண்டபத்தில் காய்கனிகள், பூக்கள், பட்டு வஸ்திரங்கள், தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், கண்ணாடி மற்றும் மங்கல பொருள்கள் கொண்டு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருக்கும். இதற்காக 500 கிலோ பொருள்கள் ஏசிஎஸ்ஜி குழுமம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டின் முதல் வரவாக, சுவாமியிடம் இருந்து பக்தா்களுக்கு மேல்சாந்தி காசுகளை வழங்குவாா். 10,000 பக்தா்களுக்கு புதிய நாணயங்கள் வழங்கப்படும். மதியம் அச்சன்கோவில் ஷேத்திர உபதேச கமிட்டி சாா்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருவிதாங்கூா் தேவசம் போா்டு உதவி ஆணையா், அச்சன்கோவில் நிா்வாக அதிகாரி, தென்காசி ஏசிஎஸ்ஜி குழுமம், அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Similar News