கோவை: குருத்தோலை ஞாயிறு பவனி-திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற இந்த பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தி சிரத்தையுடன் பங்கேற்றனர்.;
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற இந்த பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தி சிரத்தையுடன் பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர், கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏழு வாரங்கள் தவக்காலம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த புனித நாளில், கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஜெருசலேம் நகரில் இயேசு கிறிஸ்து கோவேறு கழுதையில் பவனி வந்தபோது, மக்கள் அவரை குருத்தோலைகளை ஏந்தி தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று முழக்கமிட்டு வரவேற்றதை நினைவுகூரும் விதமாக இந்த குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு பவனியில் கலந்து கொண்டனர். பவனியின்போது, கிறிஸ்தவ பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.