ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டு இரு பிரிவினரின் சார்பாக கடவுளை வழிபட்டு, பாரம்பரிய இசை நடனத்துடன் உற்சாகமாக ஆடி பாடி கொண்டாடப் பட்டது.*
ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டு இரு பிரிவினரின் சார்பாக கடவுளை வழிபட்டு, பாரம்பரிய இசை நடனத்துடன் உற்சாகமாக ஆடி பாடி கொண்டாடப் பட்டது.*;

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டு இரு பிரிவினரின் சார்பாக கடவுளை வழிபட்டு, பாரம்பரிய இசை நடனத்துடன் உற்சாகமாக ஆடி பாடி கொண்டாடப் பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் உற்சாகத்துடன் திருவிழாவாக கொண்டாடப்படும். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் புதுத்தெரு தலைமையில், ஆனையூர் தெரு, அம்மன் பொட்டல் மத்திய வடக்கு தெரு இணைந்து, தமிழ் புத்தாண்டு 338 வது ஆண்டு வெண்குடை திருவிழாவாக கொண்டாடப் பட்டது. பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப் படுவது இத் திருவிழாவின் சிறப்பு. எனவே இத் திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வருகை தருவர். சீனிவாசன் புதுத் தெருவில் இருந்து அலங்கரிக்கப் பட்ட அய்யனார் சுவாமி பூச்சப்பரத்தில் உலா வர, சப்பரத்தின் முன், காலில் சதங்கை அணிந்த நபர் வெண் குடையுடன் நடனமாடிய படி ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து, பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், மயிலாட்டம், ஆலி பொம்மை ஆட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களுடன், செல்லம் வடக்கு, தெற்கு தெரு, ஆனையூர் தெரு, அம்மன் பொட்டல் தெரு, தென்காசி சாலை, காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியாறு சாலை போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர் காத்த அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டன. இதே போல பழையபாளையத்தை சேர்ந்த சித்திரை திருவிழா குழுவினர் சார்பில், 354 வது சித்திரை திருவிழா உற்சாகமாக கொண்டாடப் பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர் காத்த அய்யனார் கோயிலின் உற்சவர் கொண்டு வரப்பட்டு மதுரை சாலையில் உள்ள மாயூரநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் உற்சவர் மற்றும் விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயிலில் தொடங்கிய ஊர்வலம் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், தென்காசி சாலை, காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியாறு சாலை என முக்கிய வீதிகள் வழியாக வந்து பழைய பாளையத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டன. திருவிழாவின் பாதுகாப்பு பணிகளுக்காக 1000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் டி.பி மில்ஸ் சாலை, ரயில்வே பீடர் சாலை வழியாக திருப்பி விடப் பட்டிருந்தன.