அருள்மிகு பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது
அருள்மிகு பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது;

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அருள்மிகு பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டஆண் பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதப் பிறப்புக்கு முதல் நாள் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 10 தினங்கள் நடத்தப்பட்டு, இன்று 11வது நாள் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை சுவாமி பூக்குழி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. பழைய பேருந்து நிலையம் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய கடை பஜார் ஆவரம்பட்டி மாடசாமி கோவில் தெரு உட்பட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அருள்மிகு திரவுபதி அம்மன், சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. சப்பரத்தின் பின்னால் தீ மிதிக்கும் பக்தர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அம்மன் வீதி உலாவானது கோவிலை வந்தடைந்ததும், பூசாரி உள்பட ஏராளமான பக்தர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள். தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில் அமைந்துள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு,டிபி மில்ஸ் சாலை வழியாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜபாளையம் பொறுப்பு டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் சிறப்பாக செய்திருந்தனர்.