ஆட்சியர் தலைமையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் திருநங்கைகள் குறைத் தீர்க்கும் முகாம்;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ், வழங்கினார்.இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்டத்தில்165 திருநங்கைகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் திட்டத்தில் 27 திருநங்கைகள் மாதம் ரூ.1,500/- பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை 95 திருநங்கைகளுக்கும், குடும்ப அட்டைகள் 100 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயதொழில் மானியம் திட்டத்தில் 4 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு இதில் 2 நபர்கள் ஆட்டோ ஓட்டுனராகவும், 2 நபர்கள் துணிக்கடை நடத்தி வருகிறார்கள்.இன்றைய தினம் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் குறைதீர்ப்பு முகாமில், திருநங்கை பயனாளிகளில் 6 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், 32 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாகள் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்" 2008 இல் அமைக்கப்பட்டது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றமடைய செய்யவும் நடத்தப்படும் இதுபோன்ற சிறப்பு குறைதீர் முகாமில் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிப்பதோடு, அரசால் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தெரிவித்தார்.