கெப்பிலிங்கம்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா- குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக வந்த கிராம மக்கள் வெள்ளைத் துண்டு வீசியவுடன் கிலோ கணக்கில் கட்லா, பாப்லெட் மீன்களை

கெப்பிலிங்கம்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா- குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக வந்த கிராம மக்கள் வெள்ளைத் துண்டு வீசியவுடன் கிலோ கணக்கில் கட்லா, பாப்லெட் மீன்களை அள்ளி சென்றனர்;

Update: 2025-04-16 15:11 GMT
விருதுநகர் காரியாபட்டி அருகே கெப்பிலிங்கம்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா- குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக வந்த கிராம மக்கள் வெள்ளைத் துண்டு வீசியவுடன் கிலோ கணக்கில் கட்லா, பாப்லெட் மீன்களை அள்ளி சென்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அழகியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கெப்பிலிங்கம்பட்டி சிவ கண்மாய், கரிச கண்மாய் என்ற இரண்டு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 10,000-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் கிராம மக்கள் சார்பில் வாங்கி விடப்பட்டது. இந்த கண்மாயில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் கோடைகாலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தண்ணீர் குறையத் தொடங்கியது. உடனே ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இலவச மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இலவச மீன்பிடி திருவிழா இன்று நடப்பதாக சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதலே அழகியநல்லூர், மாந்தோப்பு, பிசிண்டி, காரியாபட்டி, வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்மாய் இருபுறமும் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் மடையில் சாமி கும்பிட்டு நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவேண்டும் என வேண்டி சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். வெள்ளை துண்டு வீசிய உடனே கண்மாய் இருபுறமும் காத்திருந்தபொதுமக்கள் குடும்பம் குடும்பமாக மின்னல் வேகத்தில் கண்மாயில் இறங்கி வலை, ஊத்தா, தூரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு உற்சாகமுடன் மீன்களை பிடிக்க துவங்கினர். இதில் கெண்டை, கட்லா, சிசி, பாப்புலட், விரால் போன்ற பெரிய பெரிய மீன்கள் 5 முதல் 7 கிலோ வரை சிக்கின. இதில் வந்திருந்த அனைவருக்கும் பெரிய சைஸ் மீன்கள் கிலோ கணக்கில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Similar News