புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம் தொடக்கம்
தைலாபிஷேகம் தொடக்கம்;
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலது புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கை, அம்பாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மூலவராக புற்று வடிவில் அருள்பாலிக்கும் அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) தைலாபிஷேகம் நடைபெறும். அப்போது, ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனை செய்யப்படும். கருவறையிலுள்ள அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும் என்பதால், அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். இதன்படி, தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், காலை சிறப்பு ஹோமமும், கருவறையில் அம்பாளுக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் என இரு வேளைகளில் அம்பாளுக்கு தைலாபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ. கவிதா, செயல் அலுவலர் பெ. சத்தியராஜ், கண்காணிப்பாளர் ரவி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.