தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

புகையிலை;

Update: 2025-04-18 16:38 GMT
தஞ்சை அருகே வல்லத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.14 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புகையிலை விற்பனை, கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில் வல்லம் பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து வல்லம் கடைத்தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும்  புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.14 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது இந்த அதிரடி சோதனையில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அகேஸ்வரன், வல்லம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்கொண்டனர். மேலும் மீண்டும் இதே போல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வல்லம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதார துறையினர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Similar News