தஞ்சாவூர் விளார் ரோடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 39). இவர் தனியார் உணவகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விஜய்க்கு உணவகத்தில் அவர் பார்த்து வந்த வேலை பறிபோனது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த விஜய், சம்பவத்தன்று வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியே சென்றிருந்த தனது மனைவி காந்திமதிக்கு வீடியோ அழைப்பில் பேசினார். வேலை இல்லாததால் மன வேதனையில் இருக்கிறேன். இதனால் தற்கொலை செய்யப் போகிறேன் எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதைக் கேட்டு பதறி அடித்துக்கொண்டு காந்திமதி வீட்டுக்கு வேகமாக வந்தார். ஆனால் அதற்குள் வீட்டில் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார். அவரது உடலைப் பார்த்து காந்திமதி கதறி அழுதார். இது குறித்து காந்திமதி தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.