அதிமுக - பாஜக கூட்டணியை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
அமைச்சர் பேச்சு;
அதிமுக - பாஜக கூட்டணியைச் சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அதிமுக - பாஜக கூட்டணியால் சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூறுவது, பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்பது போன்றது. இக்கூட்டணியை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள். அதிமுகவை சேர்ந்த 50 ஆண்டுகால இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர் மிகுந்த மன வருத்தத்துடன் கட்சியை விட்டு வெளியேறியுள்ளதே இதற்கு சாட்சி. தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணியில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் பல லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் அதிக அளவில் இணைகின்றனர். இதற்கு நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் திட்டங்களே காரணம்" என்றார் அமைச்சர். இக்கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திமுக மாணவரணி மாநிலச் செயலர் ராஜீவ்காந்தி, துணைச் செயலர்கள் சோழராஜன், ஈரோடு வீரமணி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட 15க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.