பேராவூரணி அருகே கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் திறப்பு
திறப்பு விழா;
பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு அரசு குறு குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ், பேராவூரணி கயிறு குழுமம், பொது வசதியாக்கல் மையம் திறப்பு விழா, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. ரூபாய் 7 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மையத்தினை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி, ரெட்டவயல் கிராமத்தில் உள்ள பொது வசதியாக்கல் மையத்தில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா.அசோக்குமார் (பேராவூரணி), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் குத்துவிளக்கேற்றி, நவீன கயிறு பொருட்கள் உற்பத்தி இயந்திரங்களை பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசின் குறு குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக அரசு மற்றும் சிறப்பு நோக்க குழு ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன், 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மையத்தில், மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களான இரு பிரி கயிறு, ஜியோ டெக்ஸ்டைல் 120 கிலோ சிப்பம் கட்டுதல், மற்றும் வளர்ப்பு பைகளை உற்பத்தி செய்திடும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் நேரடியாக 200 நபர்களுக்கும், மறைமுகமாக 2000 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தென்னை நார்களில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதால், தென்னை விவசாயிகளிடமிருந்து அதிகளவு மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். பொது வசதியாக்கல் மையம் மூலம் விவசாயிகளிடமிருந்து மூலப்பொருட்கள் சரியான விலைக்கு கொள்முதல் செய்து, அதிக உற்பத்தி திறனுடன் ஏற்றுமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கு. விஜயகுமார், கயிறு குழும உறுப்பினர்கள் வை.மணிசேகரன், சொ.கோவிந்தராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, கயிறு குழும உறுப்பினர் கே.ஆர். கோவிந்தராஜன் நன்றி கூறினார்.