தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்தது அதிமுக தான் : அமைச்சர் கோவி. செழியன்
அமைச்சர்;
தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த வரை, நீட் தேர்வு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து நிலைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட, முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலம் வரை நீட் தேர்வுக்கு தமிழகத்துக்குள் இடம் தரப்படவில்லை. அவரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பாராட்டிப் பேசினார். ஆனால், எல்லாவற்றுக்கும் எடுபிடியாக, அடிமையாக 4 ஆண்டுகளாக ஒன்றிய மோடி அரசின் தயவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காரணத்தால், அன்றைக்கு நீட் தேர்வை ஏற்றுக் கொண்டார். ஆனால், நீட் தேர்வை திமுக எதிர்ப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டப்பேரவையிலும் எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், நீட் தேர்வு எதிர்ப்பு என்றால், அது திமுகதான் முழுமையாக உரிமை எடுத்துக் கொள்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதை மடை மாற்றுவதற்காகவும், மறைப்பதற்காகவும், நீட் தேர்வை உள்ளே நுழைய விட்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல; நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் எப்போதும் துணை நிற்பது திமுகதான். நீட் எதிர்ப்பு, மாநில உரிமை காப்பது, மாநில சுயாட்சி மீட்பது, யு.ஜி.சி.யை எதிர்ப்பது என ஒன்றிய அரசின் கொடுஞ்செயலுக்கு களத்தில் நின்று போராடும் போராளி தமிழக முதல்வர் தான். போராடுகிற இயக்கமும் திமுகதான். மற்ற இயக்கங்கள் ஒன்றிய அரசுக்கு துணை நின்று விட்டு மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றனர்" என்றார் அமைச்சர். முன்னதாக, விழாவில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய துங்கன் த.வே. ராதாகிருஷ்ணனின் படத்தைத் திறந்து வைத்து, சங்க வெளியீடான காக்கை விடு தூது என்ற நூலை மறு வெளியீடு செய்து, நூற்றாண்டு கண்ட தமிழாராய்ச்சி திங்களிதழான தமிழ்ப்பொழில் இலச்சினையை அமைச்சர் வெளியிட்டார். மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் எழுதிய தமிழின் பெருஞ்சுவர், வள்ளலார் காலமும், கருத்தும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டார். தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சங்கச் செயலர் இரா.சுந்தரவதனம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, கரந்தைக் கலைக்கல்லூரி முதல்வர் இரா.இராசாமணி வரவேற்றார். நிறைவாக, சங்கச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ். செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.