தஞ்சை அருகில், தார் தயாரிப்பு கலவை ஆலை இயங்க நிரந்தர தடை விதிக்க கோரிக்கை
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் மனு;
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் திங்கள்கிழமை மதியம் சக்கரசாமந்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார், பாலகிருஷ்ணன், மதியழகன், தனபால், பிரகதீஸ்வரன், குமார், சாமி ஐயா, ஜீவகுமார், வேலாயுதம், மதன் பாபு, நலங்கிள்ளி ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- எங்கள் பகுதி முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு விவசாயம் சாராத எந்தவித தொழிற்சாலையும் தொடங்கப்படக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி தஞ்சை அருகே ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு விவசாய விளை நிலங்களுக்கு மத்தியிலே தார் தயாரிப்பு கலவை ஆலையை ஒருவர் தொடங்கினார். இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள், குழந்தைகள், பெரியோர்கள் என அனைவருக்கும் கண், தொண்டை எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தார் கலவை ஆலை தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக தொடங்கினால் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று முறையிட்டபோது அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஏற்கனவே அமைந்துள்ள மற்றும் தற்போது அமைய உள்ள தார் கலவை ஆலை விவசாய பூமியின் மத்தியில் அமைந்துள்ளது. இதில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை விவசாயத்தை பாழாக்குகிறது. கால்நடைகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த ஆலை அமைந்துள்ளது. மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கரும்புகை கோவிலையும், அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்று தரக் குறியீட்டை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதில் தூய்மை காற்று கொண்ட நகரம் என தஞ்சைக்கு 5-வது இடம் கிடைத்தது. இந்த நிலையில் இது போன்ற தார் கலவை ஆலையால் இத்தகைய சிறப்பு நம்மை விட்டு செல்லும். எனவே நெல் விளையும் நிலங்களை காப்பாற்றவும், பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்கவும், இந்த இரண்டு தார்க் கலவை ஆலைகளையும் இயங்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.