தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 18 வயதுக்குள்பட்ட பள்ளிமாணவர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு மாவட்ட அளவிலான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தடகளம், கூடைப் பந்து, வாலிபால், வளைகோல் பந்து (ஹாக்கி), பளுதூக்குதல், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதோர் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாம் முற்றிலும் இலவசமானது. இதில், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களில் திறமையானவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில தேசிய, பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர். பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04362 - 235633, 74017-03496 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.