நூற்றாண்டுவிழா காணவிருக்கும் அப்பர் சாமிகள் சித்திரை சதய விழா
அப்பர் சதய விழா;
(கட்டுரையாளர்) முனைவர் மணி. மாறன் தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர். கைப்பேசி எண். 94434 76597) ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் தழைக்க பாடுபட்ட தேவார மூவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர் ஆவார். மருள்நீக்கியார், தாண்டக வேந்தர் என்றெல்லாம் அழைக்கப்பெற்ற அப்பர் பெருமான், திருவாமூரில் வேளாளர் மரபில் உதித்த புகழனார், மாதினியார் தம்பதியருக்கு பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். வடக்கே திருவண்ணாமலையும், தெற்கே கொள்ளிடமும், கிழக்கே கடலும், மேற்கே மலைகளுமாகச் சூழ்ந்து பரந்து விரிந்த நாடு முன்னாளில் திருமுனைப்பாடி நாடு என்றழைக்கப்பெற்றது. இந்நாடு சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் இருந்ததால் நடுநாடு என்றும் அழைக்கப் பெற்றது. முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்களால் ஆட்சி செய்யப்பெற்ற நாடு திருமுனைப்பாடி நாடாகும். மூன்றாம் நந்திவர்மனின் மகன் நிருபதுங்க பல்லவனின் 16ஆம் ஆட்சி ஆண்டு திருவதிகைக் கல்வெட்டில் முனைப்பேரரையர் முனையர்கோன் இளவரையன் என்னும் தொடர் காணப்படுகிறது. நடுநாட்டின் ஒரு பகுதிதான் முனைப்பாடி நாடு என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் காண முடிகின்றது. சோழ மன்னர்களில் இராஜேந்திர சோழன் தொடங்கி குலோத்துங்க சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்களில் இந்நாடு குறித்த செய்தி கிடைக்கிறது. இத்தகு சிறப்பு கொண்ட திருமுனைப்பாடி நாட்டில் உள்ள ஓர் ஊர்தான் திருவாமூர். புகழ்மிக்க இவ்வூரில் பிறந்த அப்பர் பெருமான் தலங்கள்தோறும் சென்று பாடிய பாடல்களே 4, 5, 6ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் பாடியவை திருக்கடைக்காப்பு என்றும், சுந்தரர் பாடியவை திருப்பாட்டு என்றும் அழைக்கப் பெற்று மூவர் பாடல்களும் தொகுக்கப்பெற்று தேவாரம் என்று வழங்கப்பெற்று வருகின்றது. தமிழ் பாடிய அப்பர் பெருமான் முக்தி அடைந்த நாள் சித்திரை மாத சதய நாள் ஆகும். பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு பிறந்த நாள் கொண்டாடுவதும், இறந்துபட்டோர் நினைவாக வழிபாடு செய்வதும் மரபாக இருந்து வந்தது. இன்றளவும் நம் மக்கள் பலர் இந்த வழக்கத்தைக் கொண்டொழுகி வருகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேரமன்னன் கோக்கோதை மார்பன், தான் பிறந்த சதய நட்சத்திர நாளிலேயே விழா கொண்டாடியதை பெருந்தொகையின் பழம்பாடல் விவரிக்கின்றது. மாமன்னன் இராஜராஜ சோழன் தான் பிறந்த ஐப்பசி சதயத்தன்று பிறந்த நாள் விழா எடுத்து கொண்டாடினார். இன்று சேர மன்னனுக்கு விழா எடுக்கப்பெறவில்லை. மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு தஞ்சையில் மட்டுமே சதய விழா நடைபெற்று வந்தது. தற்போது சில ஆண்டுகளாக பம்பப்படையூரிலும் விழா எடுக்கப்பெற்று சிறப்பாக நடந்து வருகின்றது. ஆனால், அப்பர் பெருமான் முக்தி அடைந்த சித்திரை மாத சதய நட்சத்திர நாளன்று திங்களூர், திருப்புகலூர், திருப்பூந்துருத்தி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அப்பர் முக்தி பெற்ற சித்திரை மாத சதய நாளன்று குருபூசை விழா சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வூர்களில் உள்ள கோயில்களுக்கு அப்பர் பெருமான் நேரில் சென்று இறைவனைப் பாடி பரவசம் அடைந்துள்ளார். ஆதலால், அங்கெல்லாம் இவருக்கு விழா எடுப்பதும் போற்றுவதும் இயல்பே ஆகும். ஆனால், நாவுக்கரசுப் பெருமானாருக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத, அவர் நேரில் சென்று தேவாரம் பாடாத ஒரு சிற்றூரில் அவருக்காக குருபூசை விழா எடுக்கப்பெற்று பிற்பகல் பொழுது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம் பாலிப்பு செய்யப்பெறுவதுடன் காலையில் தொடங்கும் விழா தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது. முதல் நாள் முழுவதும் நடைபெறும் விழாவில், இரவில் அப்பர் பெருமான் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் அமர்த்தி அந்த சிற்றூர் தெருக்கள்தோறும் விடியவிடிய வீதியுலா நடைபெறும். வீடுகள்தோறும் தேங்காய் உடைத்து, ஆரத்தி செய்து மக்கள் வழிபடக்கூடிய செயல் தமிழுக்கான விழாவாகவே இருக்கின்றது. அன்று மாலையில் அப்பர் மடாலயத்தில் அப்பர் பெருமானின் பெருமைகள் பற்றியும், தேவாரத்தின் மாண்பு குறித்தும் துறைபோகிய அறிஞர்களை அழைத்து சிறந்த சொற்பொழிவும் நடைபெறும். இவ்வூரில் சிறுவர் முதல் பெரியோர் வரை பண்ணிசையோடு தேவாரம் பாடுவர். அவற்றைக் கேட்டு இன்புறாதோர் இல்லை என்றே சொல்லலாம். இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் இங்குள்ள அப்பர் மடாலயத்தில் தொடர்ந்து 97 ஆண்டுகளாக அப்பர் சித்திரை சதய விழா நடைபெற்று வருகிறது. சற்றொப்ப இன்னும் மூன்று ஆண்டுகளில் 100ஆவது ஆண்டு குருபூசை நடைபெறவிருக்கின்றது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் அதிகாலை எழுந்து குளித்து, திருநீறு அணிந்து தேவாரப் பாடல்களைத் தெருவெங்கும் பாடிச் சென்று இறுதியில் அப்பர் மடாலயத்தை அடைந்து பூசை செய்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வூர் மக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை பலர் குழுவாக இணைந்து தேவாரம் பாடிச் செல்லும் காட்சி மிகவும் அழகானதாகும். இத்தகு சிறப்புப்பெற்ற ஊர் தஞ்சையில் இருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள களிமேடு என்னும் திருவூராகும். களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடாலயத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர் பெருமானின் படம் தஞ்சை பாணியில் வரையப்பெற்றது உள்ளது. இங்கு 23 புதன்கிழமை துவங்கி 24, 25.04.2025 ஆகிய மூன்று நாட்கள் திருநாவுக்கரசு சுவாமிகளின் 97ஆம் ஆண்டு சித்திரை சதயவிழா நடைபெறவிருக்கின்றது.