தஞ்சாவூர் மாவட்டம், அயோத்திப்பட்டியில், மினி வாட்டர் டேங்கில் குளிக்கச் சென்ற காய்கறி வியாபாரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மேலத் தெரு முகமது ஹனிபா என்பவரின் மகன் சேக் மௌலானா (53). இவர் அயோத்திப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து, காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மதியம் அப்பகுதியில் உள்ள மினி வாட்டர் டேங்கில் குளிப்பதற்காக சேக் மௌலானா சென்றார். அப்போது வாட்டர் டேங்க் மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் தண்ணீரை திறந்த சேக் மௌலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த செங்கிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேக் மெளலானா உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.