தஞ்சாவூர் அருகே, வல்லம் - ஆலக்குடி சாலையில் நின்றிருந்தவரை பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டிய கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அசோக் நகர் பகுதியை சேர்ந்த முகமது அக்பர் என்பவரின் மகன் முகமது அலி (47). இவர் கடந்த 21 ஆம் தேதி வல்லம் - ஆலக்குடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் முகமது அலியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே அரிவாளைக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து முகமது அலி வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது அலியை மிரட்டியது, தஞ்சாவூர் ரஹ்மான் நகர் கோவிந்தராஜ் மகன் செந்தில்நாதன், வல்லம் மணி, சித்திரக்குடி பிரபாகரன், தஞ்சாவூர் வல்லம் ரோடு காயிதே மில்லத் நகர் தங்கராஜ் என்பவர் மகன் விக்னேஸ்வரன் (29), தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணியரசன் (34), அய்யனாபுரம் ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்தோஷ் (24) என்பது தெரிய வந்தது. இதில் விக்னேஸ்வரன், மணியரசன், சந்தோஷ் ஆகியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து விக்னேஸ்வரன், மணியரசன், சந்தோஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.