தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நியாய விலை கடைகளில் சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும் என்பதற்காக பி.ஓ.எஸ். விற்பனை முனையக் கருவியையும், எடை தராசையும் ப்ளுடூத் மூலம் இணைத்துள்ளனா். இதே நடைமுறையைக் கிடங்குகளிலும் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்க பொருள்களைப் பொட்டலங்களில் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்துக்குத் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நியாய விலை கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன. இதையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்க வட்டத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சிவகுருநாதன், அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் தாமரைச்செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.