ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு முகாம் அலுவலரை மாற்றக்கோரி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு முகாம் அலுவலரை மாற்றக்கோரி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அரியலூர், ஏப்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றும், கௌசர் என்பவர் முகாம் அலுவலராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, முகாம் அலுவலர் மரியாதை குறைவாக நடத்தி, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அரியலூர் மாவட்டத்தை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த விடைத்தாள் திருத்தும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது முகாம் அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அரியலூர் மாவட்டத்தை தரக்குறைவாக பேசியதற்கு ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முகாம் அலுவலர் கௌசர் போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம், தம்முடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திருப்பினர். ஆசிரியர்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.