தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்டீபன் ராஜ் தலைமை வகித்து பேசியதாவது, "நூல்கள் வாசிக்கும் பழக்கம் அனைவரிடமும் பல்கிப் பெருக வேண்டும். புத்தகங்கள் படிக்கும்போது ஆழ்மனதில் நிறுத்தி படிக்க வேண்டும். புத்தகங்களை வாசித்து விட்டு சென்று விடாமல், மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதிய வைத்தால், போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்" என பேசினார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து முன்னிலை வகித்தார். முன்னதாக நல் நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருஞானம், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், எழுத்தர் பாலா, சித்த மருத்துவர் கலைச்செல்வி சண்முகம் உள்ளிட்டோர் புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினர். கவிஞர் செல்வகுமார் எழுதிய, "விண்மீன்களின் விதைகள்" என்ற கவிதை நூலை, தமிழ் பாவை மற்றும் ராமலட்சுமி ஆகியோர் திறனாய்வு செய்து பேசினர். ரூபாய் ஆயிரம் வழங்கி ஹேமலதா மற்றும் நீலப்பிறை இருவரும் புரவலராக இணைந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நூலகப் பணியாளர் பாண்டீஸ்வரி, போட்டி தேர்வு மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் சித்ரா நன்றி கூறினார்.